தமிழ்நாட்டிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்- அமித்ஷா

பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பா.ஜனதா கூட்டணி, ஆட்சியை பிடிக்கும் என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.;

Update:2025-12-08 08:50 IST

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத் மாநகராட்சி நிகழ்ச்சியில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். ரூ.1,500 கோடி மதிப்பிலான 3 விளையாட்டு வளாகங்கள் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முதல் 2025-ம் ஆண்டுவரை பா.ஜனதாவின் வெற்றி பயணம் தொடருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி, 3-வது முறையாக பிரதமராகி சாதனை படைத்தார். பீகாரில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையுடன் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. இருப்பினும், ராகுல்காந்தி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும், வாக்காளர் பட்டியலையும் குறைகூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் காங்கிரசையும், அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. மராட்டியம், அரியானா, டெல்லி ஆகியவற்றை தொடர்ந்து பீகாரிலும் காங்கிரஸ் கட்சி துடைத்து எறியப்பட்டு விட்டது. ஒவ்வொரு மூலை, முடுக்கிலும் காங்கிரசையும், அதன் கூட்டணி கட்சிகளையும் மக்கள் நிராகரித்து வருகிறார்கள்.

இந்த மேடையில் இருந்து முதல்-அமைச்சர்கள் மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் தயாராக இருக்குமாறு சொல்லிக்கொள்கிறேன். அடுத்து மேற்கு வங்காளத்திலும், தமிழ்நாட்டிலும் பா.ஜனதா கூட்டணிதான் மக்கள் ஆதரவுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது. தேர்தல் முடிவுகள் வரட்டும். மேற்கு வங்காளத்திலும், தமிழ்நாட்டிலும் திரிணாமுல் காங்கிரசும், தி.மு.க.வும் துடைத்து எறியப்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்தநிலையில், சீதா தேவி பிறந்த பீகார் மாநிலம் சீதாமரியில் சீதா தேவிக்கு கோவில் கட்டப்படும். 4 மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. 2026-ம் ஆண்டுக்குள் கோவில் கட்டி முடிக்கப்படும்.

ஆமதாபாத்தில் 2029-ம் ஆண்டு உலக போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறும். 2030-ம் ஆண்டு அங்கு காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்படும். 2036-ம் ஆண்டு ஆமதாபாத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும். அதன் மூலம் சர்வதேச விளையாட்டு வரைபடத்தில் ஆமதாபாத் முக்கிய இடம்பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்