தமிழக அமைச்சரவை கூட்டம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பங்கேற்றனர்.;
சென்னை,
தமிழக சட்டசபையில் அடுத்த மாதம் (மார்ச்) 14-ந் தேதி 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 15-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றன. அடுத்த ஆண்டு (2026) நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான் என்பதால், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன?, துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு? என்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11.45 மணிக்கு நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மேலும், மும்மொழி கொள்கையை வலியுறுத்தி மத்திய அரசு நிதி தர மறுப்பது குறித்தும், தொழில் வளத்தை பெருக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. முக்கியமாக, இருமொழி கொள்கை விவகாரம் தொடர்பாக, சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராடி வரும் நிலையில், அது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.