அமலாக்கத்துறை சோதனைக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம்

டாஸ்மாக் அலுவலகத்தில் நடத்தப்படும் அமலாக்கத்துறை சோதனைக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.;

Update:2025-03-08 14:08 IST

சென்னை,

டாஸ்மாக் கடைகளுக்கு தனியார் மது தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து மதுபானம் கொள்முதல் செய்தபோது சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாக நடைபெற்ற இந்த சோதனை மூன்றாவது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

இந்நிலையில், டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பா.ஜ.க. அரசு அமலாக்கத்துறை, வருமானவரித்துறை உள்ளிட்ட அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.

டெல்லி, ஜார்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை, வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தி வருகிறது. சத்தீஸ்கர், டெல்லி முதல்-மந்திரிகள் உள்ளிட்ட அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறை வைக்கப்பட்டனர்.

தொகுதி மறுவரை, இந்தி திணிப்பு போன்ற விவகாரங்களில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எதிர்த்து வரும் சூழலில் அமலாக்கத்துறையின் நடவடிக்கை ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

மேலும் வழக்கு தொடர்பான விசாரணை எல்லையைத் தாண்டி உயர் அதிகாரிகளையும், பணியாளர்களையும் மன உளைச்சலுக்கும், பதற்றத்திற்கும் ஆளாக்கி வரும் அமலாக்கத்துறையின் அதிகார அத்துமீறலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது என்று அதில் டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்