மதுரை-துபாய் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - பயணிகள் வாக்குவாதம்
விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.;
கோப்புப்படம்
மதுரை,
மதுரையில் இருந்து துபாய் செல்ல தனியார் விமானம் ஒன்று தயாரானது. அந்த விமானத்தில் 130 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், விமானம் ஓடுபாதைக்கு சென்று மேலே கிளம்புவதற்காக தயாரானது. அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கடைசி நேரத்தில் கண்டறியப்பட்டது.
உடனடியாக முன்னெச்செரிக்கையாக ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் விமானி அதனை திரும்ப கொண்டு வந்து நிறுத்தினார். விமானத்தில் இருந்த பயணிகள் கீழே பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். இதனை தொடர்ந்து, பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக, விமானம் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆனால், பழுது நீக்க நீண்டநேரம் ஆனது. இதனால், விமானம் ரத்து செய்யப்படுகிறது என மாலையில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேறு விமானம் ஏற்பாடு செய்ய தாமதம் ஏற்பட்டது என கூறப்படுகிறது. இதனையடுத்து, பயணிகள் அவதி அடைந்தனர்.
விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.