தென்காசி பேருந்து விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்
தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.;
தென்காசி,
தென்காசியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணமாக வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெர்வித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தள பதிவில்,
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் துரைச்சாமியாபுரம் காமராஜபுரம் பகுதியில், கொல்லம்- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை இரு தனியார் பேருந்துகள் நெற்கு நேர் மோதியதில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 66 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் பூரண உடல்நலம் பெற வேண்டுவதோடு, அவர்களுக்குரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.