சீக்கிய குரு தேக் பகதூரின் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழா - பஞ்சாப் முதல்-மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
குரு தேக் பகதூரின் துணிச்சல், மத சுதந்திரம் உள்ளிட்ட உன்னத லட்சியங்களுக்கு தனது மரியாதையை செலுத்துவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கடந்த அக்டோபர் 17-ந்தேதி தலைமைச் செயலகத்தில், பஞ்சாப் மாநில பொதுப்பணித் துறை மந்திரி எஸ்.ஹர்பஜன் சிங் மற்றும் பஞ்சாப் மாநில நீர்வளத்துறை மந்திரி பிரேந்தர் குமார் கோயல் ஆகியோர் சந்தித்து, பஞ்சாப் மாநில அரசின் சார்பில் ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நடைபெறும் ஒன்பதாவது சீக்கிய குரு தேக் பகதூரின் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழாவிற்கு வருகை தர அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் சார்பாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோரை அவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில், 23-ந்தேதி(நேற்று) ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நடைபெற்ற ஒன்பதாவது சீக்கிய குரு தேக் பகதூரின் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழாவில், பழனிவேல் தியாகராஜன் மற்றும் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்துகொண்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் மற்றும் நினைவுப் பரிசை பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மானிடம் வழங்கினர்.
பஞ்சாப் முதல்-மந்திரிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய அந்த கடிதத்தில், “குரு தேக் பகதூரின் 350-வது தியாக தின நினைவேந்தல் விழாவில் கலந்துகொள்ளுமாறு எனக்கு அளித்த அழைப்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த முக்கியமான நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனையும், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியையும் எனது சார்பாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். அவர்களை அன்புடன் வரவேற்க முன்வந்த தங்கள் நல்லெண்ணத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நினைவுப் பரிசினை அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
விழா மிகச் சிறப்பாக நடைபெற எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குரு தேக் பகதூர் நிலைநாட்டிய துணிச்சல், கருணை மற்றும் மத சுதந்திரம் ஆகிய உன்னத லட்சியங்களுக்கான தனது மரியாதையை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.