புலி தாக்கியதில் பழங்குடியின பெண் பலி: ஆடு மேய்க்க சென்றபோது நேர்ந்த சோகம்
நீலகிரி மாவட்டம் உதகையில் புலி தாக்கி இழுத்துச் சென்றதில் பெண் உயிரிழந்தார்.;
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மசினகுடி ஊராட்சி, மாவனல்லா பகுதியை சேர்ந்தவர் பாலன் (வயது 69). இவரது மனைவி நாகியம்மாள் (வயது 65). பழங்குடியின பெண்ணான இவர், ஊருக்கு அருகே உள்ள வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார்.அப்போது, அருகில் உள்ள வாய்க்காலுக்கு தண்ணீர் குடிக்க வந்த புலி ஒன்று, மரத்தடியில் நின்று கொண்டிருந்த நாகியம்மாளை பார்த்துவிட்டது.
பதுங்கி வந்த புலி நாகியம்மாள் மீது பாய்ந்து தாக்கியது. அவரது அலறல் சத்தம் கேட்டு, தூரத்தில் இருந்த பார்த்த சிறுவன் ஒருவன், உடனடியாக ஊருக்குள் ஓடிச்சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்தான்.
உடனே ஊர் பொதுமக்களும், மசினகுடி வனத்துறையினரும், போலீசாரும் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அதுவரை புலி நாகியம்மாளை கொன்று உடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. கூட்டமாக, பொதுமக்கள் வருவதை பார்த்ததும் காட்டுக்குள் ஓடிச்சென்று மறைந்தது. தலையில்லாமல் முண்டமாக கிடந்த நாகியம்மாளின் உடலை போலீசார் மீட்டு, ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். தப்பியோடிய புலியை உடனே கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வனத்துறையினரும் அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்வதாக நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பழங்குடியின பெண் புலியால் தாக்கப்பட்டு பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.