திமுக முப்பெரும் விழாவுக்கு தயாரான மாநாட்டுத் திடல் -மு.க.ஸ்டாலின் பகிர்ந்த டிரோன் காட்சிகள்!
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் புறப்பட்டார்.;
கரூர்,
திமுக சார்பில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17-ந் தேதி மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
இவ்விழாவில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு செல்கிறார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், கலெக்டர் சரவணன் உள்பட அதிகாரிகள் மற்றும் திமுகவினர் வரவேற்பு அளிக்கின்றனர்.
வரவேற்பு முடிந்த பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் காலை 10.45 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதிக்கு வருகிறார். அங்கு பெரியாரின் 147-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் கரூர் செல்கிறார். அங்கு திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு கரூர் மாநகர் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் திமுகவின் கொடிகம்பங்கள் கரூரில் உள்ள சாலைகளின் இருபுறங்களிலும் கட்டப்பட்டுள்ளது. திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி கரூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த நிலையில், திமுக முப்பெரும் விழாவுக்கு தயாரான மாநாட்டுத் திடலின் டிரோன் காட்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து கரூரில் நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் புறப்பட்டார்.