கூட்டுறவு சங்க பணியாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அங்காடி பணியாளர்கள், கணினி, நகை மதிப்பீட்டாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கூட்டுறவு சங்கங்களில் தனித்தனி நிர்வாகம் என்ற முறையில் காலி பணியிடங்களை நிரப்ப நிர்வாகத்திற்கு இருந்த அதிகாரம் பறிக்கப்பட்டு மாநில அளவில் ஆள் சேர்ப்பு மையம் ஏற்படுத்தி அதன் மூலம் பணி நியமனம் செய்யப்படுகிறது. ஆனால் பதவி உயர்வுக்கு மாவட்ட அளவில் மூப்பு பட்டியல் தயார் செய்வதால் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
அங்காடிகளில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தொய்வு உள்ளதாக ஊழியர்கள் மத்தியில் இருந்து புகார்கள் வருகின்றன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் திறக்கப்பட்ட முதல்வர் மருந்தகம் என்று கிராமங்களில் ஆரம்பிக்கப்பட்டது தற்போது எங்குமே முழுமையான விற்பனைகள் நடைபெறுவதில்லை. சங்கத்தில் பணி செய்து ஓய்வு பெறுகின்ற ஊழியர்களுக்கு ஓய்வு கால நிதி பயன்களும் முழுமையாக கிடைக்கப் பெறுவதில்லை. புதுப்புது திட்டங்களை கொண்டு வந்து கூட்டுறவு சங்கங்கள் அறிமுகப்படுத்தினாலும் அந்தத் திட்டங்கள் முழுமையாக வெற்றி பெறவில்லை.
விவசாயிகளுக்கான பயிர் கடன் வழங்குவதிலும் போதிய நிதி பற்றாக்குறை உள்ளதால் சங்கத்தில் பணிபுரிகின்ற பணியாளர்களால் விவசாயிகளை முழுமையாக திருப்திபடுத்த முடியவில்லை. கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிகின்ற ஊழியர்களுக்கான பணி பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு கிடைக்க கூடிய அனைத்து ஊதிய உயர்வுகளும் உடனடியாக கிடைக்க தமிழக அரசு வழி செய்து அவர்களின் பணி சேவையை அங்கீகரித்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.