போக்குவரத்துத் தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஓய்வுகால பணப் பயன்களை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.;

Update:2025-10-10 16:30 IST

கோப்புப்படம் 

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

"1998-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்துப் பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்" என தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், தி.மு.க ஆட்சி முடிவடையும் தருவாயிலும், மேற்படி வாக்குறுதி நிறைவேற்றப்படாததோடு, ஓய்வூதியப் பலன்களும் அளிக்காத அவல நிலை நிலவுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு எவ்வித ஓய்வூதியப் பலனும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக அளிக்கப்படவில்லை. இதனை வலியுறுத்தியும், 15-வது ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களும், ஓய்வூதியர்களும் காத்திருப்பு போராட்டம் சாலை மறியல் போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 2023-ம் ஆண்டு ஜூலை முதல் 2025-ம் ஆண்டு ஜனவரி வரை ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும் பணிக்காலத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஓய்வூதியப் பலன்கள் வழங்க ஏதுவாக 2,451 கோடி ரூபாயை வழங்க அரசுக்கு போக்குவரத்துத் துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த அரசு 2023 ஜூலை முதல் 2024 ஏப்ரல் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கும் வகையில் 1,137 கோடி ரூபாயை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கி இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. இது போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் 15-வது ஊதியக் குழு ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்குதல், ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனுக்குடன் அளித்தல், ஓய்வூதியதாரர்களுக்கு பத்து மாத அகவிலைப்படி நிலுவையை வழங்குதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேற்று அண்ணா சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 950 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சட்டப்படி தங்களுக்கு சேர வேண்டியதை பெறுவதற்காக போராடும் ஊழியர்களை அழைத்துப் பேசாமல் அவர்களை கைது செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் இது கடும் கண்டனத்திற்குரியது.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற நாளன்றே வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை விடுப்பு ஊதியம் என பல்வேறு பணப் பயன்கள் கிடைக்கின்ற நிலையில், அரசு நிறுவனம் இந்த சட்டப்படியான பணப் பயன்களை தாமதமாக வழங்குவது கடும் கண்டனத்திற்குரியது. அரசே சட்டத்தை மீறுவது என்பது வேலியே பயிரை மேய்வது போல் ஆகும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிவிட்டு ஓய்வூதியப் பலன்களைக்கூட அளிக்காமல் இருப்பது இயற்கை நியதிக்கு முரணான செயல்.

முதல்-அமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஓய்வுகால பணப் பயன்களை உடனடியாக வழங்கவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தவும், ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்கவும், 15-வது ஊதிய ஒப்பந்த நிலுவைத் தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்