விஜய்யை முதல்-அமைச்சராக்க பல மடங்கு களப்பணி ஆற்றுவேன் - குணமடைந்து வீடு திரும்பிய தவெக பெண் நிர்வாகி
கடந்த 25-ந்தேதி அஜிதா ஆக்னல் தூக்க மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.;
கோப்புப்படம்
தூத்துக்குடியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி அஜிதா ஆக்னல் தனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜய்யின் காரை வழிமறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் கட்சி மூத்த நிர்வாகிகளின் பேச்சுவார்த்தையை ஏற்று பனையூரில் இருந்து கலைந்து சென்றார்.
இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி அவர் தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டில் தூக்க மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் உடல்நலம் தேறி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அஜிதா ஆக்னல் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்த நிலையில் அஜிதா ஆக்னல் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், "கழகத் தோழர்கள் என் மீது கொண்ட பேரன்பினாலும் பிரார்த்தனைகளாலும் மட்டுமே பூரண குணமடைந்துள்ளேன். 2026-ல் விஜய்யை முதல்வராக அரியணையில் ஏற்ற பலமடங்கு அதிக வேகத்தில் களப்பணியாற்ற உறுதி கொண்டுள்ளேன். வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" என்று குறிப்பிட்டுள்ளார்.