பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றியதுதான் திமுக அரசின் சாதனை - நயினார் நாகேந்திரன்
பெண்களின் பாதுகாப்பும், சமூகத்தின் அமைதியும் தமிழகத்தில் நிலைநாட்டப்பட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சதீஷ் என்பவர் அரிவாளைக் காட்டி மிரட்டி இளம்பெண் ஒருவரைக் காரில் கடத்த முயன்றதாக வெளியாகியுள்ள காணொளி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது.
திமுக நிர்வாகியின் மகன் என்ற செல்வாக்கைப் பயன்படுத்தி சதீஷ் அப்பெண்ணைத் தனது ஆசைக்கு இணங்க அழைத்ததாகவும், இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்து கருத்து வேறுபாடு காரணமாக அப்பெண் பிரிந்து விட்டதாகவும் பலவாறான தகவல்கள் வெளிவந்தாலும்கூட, பொதுவெளியில் பகிரங்கமாக ஒரு பெண்ணை ஆயுதம் காட்டி மிரட்டும் ஆணவத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய கொடூர மனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
திமுகவினரின் கட்டளைகளை நிறைவேற்றும் கைக்கூலிகளாக காவல்துறையினர் மாறிவிட்டதன் விளைவுதான் திமுக ஆட்சியில் குற்றங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. சுப்ரீம் கோர்ட்டே உத்தரவிட்ட பிறகும் கூட தமிழகக் காவல்துறைக்குத் தலைமையை நியமிக்க மறுக்கும் முதல்வரின் அலட்சியத்தால்தான் குற்றவாளிகள் எல்லாம் கொழுப்பெடுத்துப் போய்த் திரிகின்றனர்.
இப்படிப் பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாகவும் குற்றவாளிகளின் கூடாரமாகவும் தமிழகத்தை மாற்றியதுதான் திமுக அரசின் முக்கிய சாதனை. இப்பேற்பட்ட ஒரு கேடுகெட்ட ஆட்சி வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்! பெண்களின் பாதுகாப்பும் மக்களின் நிம்மதியும் சமூகத்தின் அமைதியும் தமிழகத்தில் நிலைநாட்டப்பட வேண்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.