கோவையில் அவசர கதியில் செம்மொழிப் பூங்கா திறப்பு - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

30 சதவீத மரங்கள் நடப்படவில்லை. செயற்கை புல் தரைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது என எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.;

Update:2025-11-28 17:22 IST

சென்னை,

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

25.11.2025 அன்று கோவைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் காந்திபுரம், சிறைச்சாலை மைதான வளாகத்தில் ரூ.204 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த செம்மொழி பூங்காவை பணிகள் முழுமையாக முடிவடையாமல், அவசர கதியில் விளம்பரத்திற்காக திறந்து வைத்துள்ளார். சுமார் 70 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளதாக கோவை மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

SEIA Clearance (State Environmental Impact Assessment Clearance from TNPCB) அனுமதி பெறப்படவில்லை.

முடிவடையாத பணிகள் :

  • 30% மரங்கள் நடப்படவில்லை.
  • செயற்கை புல் தரைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
  • முன் நுழைவு வாயில் முகப்பு (Front Entrance Wall)
  • மாநாட்டு மையம் - தரைத் தளம் (Flooring work)
  • சுற்றுச் சுவர் (Compound Wall)
  • கட்டண விளையாட்டு மைதானம் (Pay Play Field)
  • திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம் (Open GYM)
  • போதுமான கழிப்பிட வசதி போன்றவை ஏற்படுத்தப்படவில்லை.
  • விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படவில்லை.
  • கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகள் முழுமையடையவில்லை.

கோவை மாநகராட்சியில் பல இடங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை; ஏற்கெனவே இருக்கும் பூங்காக்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என்று மக்கள் அடுக்கடுக்காக புகார்கள் தெரிவித்தும்; ஏற்கெனவே அளித்த நிர்வாக அனுமதியைக் காட்டிலும் 40 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டும், முழுமை பெறாத இந்தப் பூங்காவை அவசர அவசரமாகத் திறந்தது ஏன் ? மேலும், பல பணிகள் ஒப்பந்தப் புள்ளி கோரப்படாமல், நாமினேஷன் முறையில் விடியா திமுக அரசுக்கு வேண்டிய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் செய்திகள் தெரிய வருகிறது.

எனது தலைமையிலான அம்மாவின் அரசு, சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் (ஸ்மார்ட் சிட்டி) கோவை மாநகராட்சிப் பகுதியில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட, கோவை மக்களின் பொழுதுபோக்கு இடங்களாகத் திகழ்ந்த; பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த பூங்காக்களான உக்கடம்-பெரியகுளம், குறிச்சி குளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி குளம், குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம் ஆகியவை தற்போது ஆகாயத் தாமரைகள் படர்ந்து, போதிய பராமரிப்பின்றி கேட்பாரற்று உள்ளது.

எங்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பூங்காக்கள், குளங்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இவைகளை மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்காமல் உள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில், இதுவரை கோவை மாவட்ட மக்களையும், தொழில் துறையினரின் கோரிக்கைகளையும் திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது. அவற்றில் ஒருசில-

  • அத்திக்கடவு-அவிநாசி திட்டம் I-ல் விடுபட்ட பகுதிகளை இணைத்து அம்மாவின் அரசு அறிவித்த அத்திக்கடவு-அவிநாசி திட்டம்-Ilஐ முதல்-அமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
  • கோவை மாநகராட்சியால் வெள்ளலூரில் 61.62 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.168 கோடி மதிப்பில் 'ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்' அம்மா ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, 50 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் திமுக அரசு இப்பணியை கிடப்பில் போட்டுள்ளது.
  • அதேபோன்று, கோவை மாநகராட்சியில் சுமார் 200 உட்புற சாலைகள் உட்பட முக்கிய அடிப்படைக் கட்டமைப்புகளை சீரமைக்க ரூ. 150 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ஒப்பந்தப் புள்ளி ரத்து செய்யப்பட்டது.
  • கோவை மாவட்டத்தில் முக்கிய சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். சாலைகளை சீரமைக்க இந்த அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
  • கோவை மாவட்ட வளர்ச்சிக்கு நாங்கள் திட்டமிட்ட, கோவை மெட்ரோ ரெயில் திட்டத்தை சரியான முறையில் முன்மொழிவு அனுப்பாத காரணத்தால் இத்திட்டம் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது.
  • அம்மாவின் அரசு கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு தேவையான நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் இத்திட்டத்தையும் திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.

இப்படி திமுக அரசு, அம்மாவின் அரசு கொண்டு வந்த பல திட்டங்களை கைவிட்டுவிட்டது. இந்நிலையில், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று, அரசு சக்கரத்தை சுழற்றும் குணம் கொண்ட மு.க. ஸ்டாலின், அரைகுறையாக இந்தப் பூங்காவை திறந்து வைத்து கோவை மக்களை ஏமாற்றி வாக்குகளை அறுவடை செய்யலாம் என்று பகல் கனவு காண்கிறார். பொம்மை முதல்-அமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசிற்கு 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், கோவை மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்