13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி சான்றிதழ்கள், ரூ.50,000 மானியத்தொகை - மா.சுப்பிரமணியன் வழங்கினார்
திருநங்கைகள் யாராவது ரூ.1 லட்சம் மானியத்துடன் ஆட்டோக்களை பெற விரும்பினால் எங்களை வந்து அணுகவும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (28.11.2025) சென்னை முகாம் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை சார்பில் தென்சென்னை, மண்டலம் 9 முதல் 15 வரை உள்ள 13 திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி முடித்த சான்றிதழ்களும், ரூ.50,000/- மானியத்திற்கான காசோலைகளையும் வழங்கினார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
சென்னை மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மண்டலம் 9 முதல் 15 வரை உள்ள திருநங்கையர்களுக்கு திறன் பயிற்சி முடித்து அதற்கான சான்றிதழ்களும், மானியத் தொகையாக ரூ.50,000/- காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது. 2008ஆம் ஆண்டு கலைஞர் திருநங்கை, திருநம்பி என்று இச்சமூகத்தினருக்கு பெயர் சூட்டினார்கள். பெயர் சூட்டியது மட்டுமல்லாது இவர்களுக்கான நலவாரியத்தையும் அன்று அமைத்தார்கள். இந்தியாவிலேயே திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்தது என்பது தமிழ்நாட்டில்தான் அது கலைஞரால் தான்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் தொடர்ந்து பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த திட்டங்களில் ஒன்றுதான் திருநங்கைகளுக்கு திறன் பயிற்சி வழங்கி அதற்கான் சான்றிதழ்கள் மற்றும் ரூ.50,000/- மானியம் வழங்கிடும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருநங்கையர் நலவாரியத்தைப் பொறுத்தவரை திருநங்கையர்களின் நலனைக் காப்பதற்கும் அவர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்கும் சமூலநலத்துறை அமைச்சகத்தின் தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,500/- உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி பயிலும் திருநங்கைகளுக்கு கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம், பிற செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்று அதற்கான சலுகைகளையும் வழங்கி வருகிறது. சிறப்புத் திறமைகளை கொண்ட திருநங்கைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 அன்று திருநங்கைகளுக்கான சிறப்பு விருது ஒன்றும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
திருநங்கைகளின் நலனுக்காக பிரத்யேக சுகாதார நலத்திட்டங்களும் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அனைத்திலும் குறிப்பாக விருதுநகர், மதுரை, பல்வேறு மாவட்டங்களில் திருநங்கைகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. திருநங்கைகள் அவர்களுக்கான அறுவை சிகிச்சைகளுக்கு பல்வேறு வெளிநாடுகளில் குறிப்பாக தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு சென்று திறமையற்ற மருத்துவர்களால் அல்லது போதுமான வசதிகள் இல்லாத நிலையங்களில் அறுவை சிகிச்சை செய்து ஏராளமான உயிர்கள் பிரிந்திருக்கின்றன.
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு, திருநங்கைகளுக்கென்று அறுவை சிகிச்சை மையங்கள், சிகிச்சை மையங்களை அரசே இன்றைக்கு பல்வேறு இடங்களில் தொடங்கி அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது. முதல்-அமைச்சர் கடந்த அக்டோபர் மாதத்தில் சென்னை மற்றும் மதுரையில் அறன் என்கின்ற விடுதியை தொடங்கி வைத்திருக்கிறார்கள். இந்த விடுதியில் திருநங்கைகள் குறுகிய கால இடைவெளியில் தங்கி செல்வதற்குரிய வசதியை அந்த விடுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இரண்டு விடுதிகள் செயல்பட்டுக் கொண்டு வருகிறது. திருநங்கைகள் சமூகத்திலும் பொருளாதாரத்திலும் சமமான வாய்ப்புகளை பெறுவதற்கும் அவர்களும் நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் ஏதுவாகத்தான் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் மற்ற திருநங்கைகளும் பயன்பெற வேண்டும் என்கின்ற கோரிக்கை வைக்கப்படுகிறது. அரசின் மூலம் வழங்கப்படும் இதுபோன்ற திட்டங்களில் பயன்பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பம். அந்தவகையில் இன்று 13 பேருக்கு அவர்களின் வாழ்வாதாரம் பெருக இருக்கின்றது.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய பிங்க் நிற ஆட்டோக்கள் வழங்கி இருக்கிறார்கள். அதிலும் கூட சைதாப்பேட்டை தொகுதியில் 100 மகளிருக்கான ஆட்டோக்களை பெற்றுத்தருகின்ற போது 18 திருநங்கைகளுக்கு மஞ்சள் நிற ஆட்டோக்கள் நாங்களே ஓட்டுநர் உரிமம் பெற்றுக் கொடுத்து ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய மஞ்சள் நிற ஆட்டோக்களை பெற்றுத் தந்திருக்கிறோம். இன்னமும் கூட வேறு பகுதிகளில் உள்ள திருநங்கைகள் யாராவது இருந்து ரூ.1 லட்சம் மானியத்துடன் கூடிய ஆட்டோக்களை பெற விரும்பினால் எங்களை வந்து அணுகவும். நாங்கள் அவர்களுக்கு பேட்ச் ஓட்டுநர் உரிமம் இலவசமாக பெற்று தந்து அவர்களுக்கு ஆட்டோக்களை பெற்றுத் தர தயாராக இருக்கிறோம். எங்கள் அலுவலகத்தை அணுகி அதற்கான பெயர் பதிவு செய்தால் அவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட சமூக அலுவலர் வெ.முத்துச்செல்வி மற்றும் இளநிலை உதவியாளர் திருநங்கை ராதா ஆகியோர் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.