தேனிலவு சென்ற இடத்தில் தெரியவந்த உண்மை.. அவமானத்தில் புதுப்பெண் சோக முடிவு- போலீசுக்கு பயந்து உயிரை மாய்த்த கணவர்
திருமணம் ஆன இரண்டு மாதங்களிலேயே புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது;
பெங்களூரு
பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியைச் சேர்ந்தவர் சூரஜ் சிவன்னா (வயது 26). இவர் ஆன்லைன் டெலிவரி தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது மனைவி கன்வி (26), எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்களுக்கு கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி பெங்களூரில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அவர்கள் சில நாட்கள் பெங்களூரில் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர் இருவரும் இலங்கைக்கு 10 நாள் தேனிலவுக்குச் சென்றனர். அங்கு இருந்தபோது, சூரஜ் கன்வியின் திருமணத்திற்கு முந்தைய காதல் விவகாரம் குறித்து அறிந்தார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, ஐந்து நாட்களிலேயே தேனிலவை ரத்து செய்துவிட்டு பெங்களூரு திரும்பினர். இந்த நிலையில், தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்ற கன்வி கடந்த வாரம் திடீரென தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கன்வியின் மூளை செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் கன்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமணம் ஆன இரண்டு மாதங்களிலேயே புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணம் ஆனதிலிருந்தே கன்விக்கும் அவரது மாமியார் ஜெயந்தி (வயது 60) என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.கன்வியை சூரஜின் குடும்பத்தினர் அவமரியாதையாக நடத்தியதாகவும், வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் கன்வியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, பெங்களூரு காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். காவல்துறையினர் தற்கொலைக்கு தூண்டியதாக சூரஜ் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, சூரஜ் மற்றும் அவரது தாயை கைது செய்யக் கோரி கன்வியின் குடும்பத்தினர் சூரஜ் வீட்டின் முன்பாக திரண்டு போராட்டம் நடத்தினர்.
அடுத்தடுத்த சம்பவங்களால் விரக்தியிலும், காவல்துறையினர் தன்னை விசாரிப்பார்களோ என்ற அச்சத்திலும் இருந்த சூரஜ் சிவன்னா, சம்பவத்தன்று தனது தாய் ஜெயந்தி மற்றும் சகோதரர் சஞ்சய் ஆகியோருடன் பெங்களூரிலிருந்து வெளியேறினார். முதலில் அவர்கள் ஐதராபாத் சென்றனர். பின்னர் கடந்த 26-ஆம் தேதி, கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நாக்பூருக்கு சென்றனர். அங்கு நாக்பூரின் வர்தா சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.
இந்த நிலையில், சூரஜ் சிவன்னா அந்த அறையில் தூக்குமாட்டிக் கொண்டார். வெளியில் சென்றிருந்த ஜெயந்தி, இரவு சூரஜின் அறைக்குத் திரும்பியபோது, மகன் பிணமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரும் தூக்குமாட்டிக் கொள்ள முயன்றார். ஆனால் கயிறு அறுந்து அவர் கீழே விழுந்தார்.அவரது அலறல் சத்தம் கேட்டு ஓட்டல் ஊழியர்கள் சம்பவ இடத்தில் கூடினர். சூரஜ் மற்றும் ஜெயந்தியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சூரஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெயந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, காவல்துறையினர் சூரஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவரது சகோதரர் சஞ்சயிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, கன்வியின் குடும்பத்தினர் தொடர்ந்து தங்களுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், சம்பவத்தன்று சுமார் 30 பேர் சூரஜை தேடி அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்ததாகவும், இதனால் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் சஞ்சய் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.