பிரதமரின் பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - டிடிவி தினகரன்

தொடர் விடுமுறையாலும், மழையாலும் ஏராளமான விவசாயிகள் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.;

Update:2025-11-12 22:52 IST

கோப்புப்படம் 

நெல் உள்ளிட்ட பயிர்களுக்குக் காப்பீடு செய்வதற்கு 15-ம் தேதியுடன் நிறைவடையும் கால அவகாசத்தை நவம்பர் 30 வரை நீட்டிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் நெல் உள்ளிட்ட 11 வகையிலான பயிர்களுக்குக் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் வரும் 15-ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தீபாவளி, ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகைகளுக்கான தொடர் விடுமுறையின் காரணத்தாலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த தொடர் மழையாலும் ஏராளமான விவசாயிகள் தங்களின் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

பயிர்காப்பீடு செய்வதற்கான அடங்கல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வழங்க வேண்டிய வருவாய் நிர்வாக அலுவலர்களும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் விவசாயிகளுக்கு பல்வேறு சிக்கல்களையும், காலதாமதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி பிரதமரின் பயிர்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசத்தை நவம்பர் 30-ம் தேதிவரை நீட்டிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்