பெண் சிசு என கண்டறிந்து கருவை கலைக்க கூறியதால் நடந்த விபரீதம்.. கர்ப்பிணி எடுத்த முடிவால் அதிர்ச்சி

கருவில் வளரும் குழந்தை பெண் என கண்டறிந்து, கர்ப்பத்தை கலைக்க அந்த பெண்ணை துன்புறுத்தி வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-06-26 07:53 IST

கீழ்பென்னாத்தூர்,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த கரிக்கலாம்பாடி வீரபத்திரன் நகரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி உமாதேவி (வயது 25). இவர்களது மகள் மேகனாஸ்ரீ (வயது1). கர்ப்பிணியாக இருந்த உமாதேவி நேற்று முன்தினம் அவரது குடும்பத்துக்கு சொந்தமான கிணற்றில் மகள் மேகனாஸ்ரீயுடன் பிணமாக மீட்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை செய்து வந்தனர். உமாதேவியின் தந்தை ஏழுமலை வாணாபுரம் புதூர் பகுதியை சேர்ந்தவராவார்.

இந்த நிலையில் தனது மகள் உமாதேவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என கீழ்பென்னாத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏழுமலை புகார் அளித்தார். இதையடுத்து உமாதேவி தற்கொலை தொடர்பாக அவரது கணவர் விக்னேஷ், மாமனார் ஜெயவேலு, மாமியார் சிவகாமி மற்றும் கணவரின் குடும்ப நண்பர் ஒருவர் என 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உமாதேவி மற்றும் குழந்தை மேகனாஸ்ரீ உடல்களை பிரேதபரிசோதனை செய்து உமாதேவியின் தந்தை ஏழுமலையிடம் ஒப்படைத்தனர்.

ஏற்கனவே பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் கருவில் ஆணா, பெண்ணா என கண்டறிய ஸ்கேன் மையங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீறி கண்டறிந்து கூறும் ஸ்கேன் மைய உரிமையாளர்கள், டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதனையும் மீறி கர்ப்பிணி உமாதேவி பரிசோதனை செய்தபோது ஸ்கேன் செய்த அந்த மையத்தில் தடையை மீறி ஆணா..? பெண்ணா..? என குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். இதுவே உமாதேவியை அவரது கணவர் குடும்பத்தார் தற்கொலைக்கு தூண்டியது காரணமாக அமைந்துள்ளது.

இதனால் பரிசோதனை முடிவை கூறிய ஸ்கேன் மையம் குறித்து கைதான உமாதேவியின் கணவர் விக்னேஷ், மாமனார் ஜெயவேலு, மாமியார் சிவகாமி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்