உடுமலை-மூணாறு சாலையில் குட்டியுடன் உலவும் காட்டுயானை: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்த வேண்டாமென வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.;

Update:2025-12-28 06:41 IST

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கடமான், மரநாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக உடுமலை- மூணாறு சாலையில் யானை ஒன்று குட்டியுடன் உலா வருகிறது. பின்னர் அது அடிவாரப் பகுதியில் முகாமிடுவதுமாக உள்ளது. இந்நிலையில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் குட்டியுடன் உலா வரும் யானையை செல்போன், கேமராக்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், உடுமலை-மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அதன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லக் கூடாது. வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்தக்கூடாது. வனவிலங்குகள் மீது கற்கள் வீசுவதை தவிர்க்க வேண்டும். யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடக்க நேர்ந்தால் பொறுமை காத்து விலங்குகள் சென்ற பின்பு செல்ல வேண்டும். அவற்றை அச்சுறுத்தும் விதத்தில் நடந்து கொள்ளக் கூடாது. அத்துடன் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் புங்கன் ஓடை, எஸ்-வளைவு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் ரோந்து பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்