மேற்கு தொடர்ச்சி மலைகள் கவலை அளிக்கும் நிலையில் உள்ளன: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
நீர் ஆதாரத்தை வழங்கக்கூடிய நதிகளின் பிறப்பிடமாகவும் மேற்கு தொடர்ச்சி மலைகள்தான் உள்ளன.;
சென்னை,
மேற்கு தொடர்ச்சி மலைகள், இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு நீண்ட மலைத்தொடர் ஆகும். குஜராத்தின் தென் பகுதியில் தொடங்கி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டு இருக்கிறது.
இமயமலைத் தொடரை காட்டிலும் பழமையான மலைத் தொடராக இது பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைகள் வரலாறு, நீர்வளம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை கொண்டிருப்பதால் இந்தியாவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பாக பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் முக்கிய ஆதாரமாக இந்த மலைகள் இருந்து வருகிறது. இந்தியாவில் குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநிலங்களில் பரவி இருக்கின்றன. இந்த மாநிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரத்தை வழங்கக்கூடிய நதிகளின் பிறப்பிடமாகவும் மேற்கு தொடர்ச்சி மலைகள்தான் உள்ளன.
தமிழ்நாட்டின் ஜீவநதியான ‘காவிரி', இந்தியாவின் 2-வது மிக நீளமான நதி என்ற பெயரை கொண்ட ‘கோதாவரி', தமிழ்நாட்டுக்குள் மட்டுமே பாய்ந்தோடும் ‘தாமிரபரணி', கேரளாவின் மிக நீளமான நதி ‘பெரியாறு', மங்களூரு நகரத்துக்கு நீர் ஆதாரமாக இருக்கும் ‘நெத்ராவதி', கோவாவின் முக்கிய நதியான ‘மாண்டவி', வருசநாடு மலைத்தொடரில் உற்பத்தியாகும் ‘வைப்பாறு' மற்றும் கிருஷ்ணா, துங்கபத்ரா, பாரதப்புழா, சூரல், பம்பா போன்ற நதிகளும் இங்குதான் பிறக்கின்றன.
இவ்வளவு வளங்களையும், உயிரினங்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் வழங்கக்கூடிய மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போது ‘குறிப்பிடத்தக்க கவலை' (சிக்னிபிசியன்ட் கன்சன்) அளிக்கும் நிலையில் உள்ளதாக உலகளாவிய இயற்கை மற்றும் அதன் வளங்களை பாதுகாக்கும் முன்னணி அமைப்பான இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (ஐ.யு.சி.என்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
காலநிலை மாற்றம், கட்டுப்பாடற்ற சுற்றுலா, குப்பைகள் சேருதல், வெளிநாட்டு இன தாவரங்களின் ஆக்கிரமிப்பு, சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவை இந்த கவலைக்கு காரணங்களாக சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக நீர் மின்திட்டங்களை செயல்படுத்துவது, வணிக பயிர்களை பயிரிட இயற்கை காடுகளை அழிப்பது, பசுமை மாறா காடுகள் பரப்பை குறைப்பது ஆகியவையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க அவசரமான மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது அவசியம் என சூழலியல் பாதுகாவலர்கள் தெரிவிக்கின்றனர்.