சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அண்மையில் நடந்தது.;
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போதைய நிலையில் நான்குமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது.
மேலும் அ.தி.மு.க. தனது கூட்டணிக்குள் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை கொண்டு வர விருப்பப்படுகிறது. அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது. அதேவேளையில், இப்போது கூட்டணியில் உள்ள பா.ஜனதாவுக்கு எத்தனை சீட்டுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அந்த கட்சியினர் இடையே ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை அண்மையில் நடத்தி முடித்த அ.தி.மு.க. சூட்டோடு, சூட்டாக சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகிக்கும் பணியை இன்று தொடங்குகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபை பொதுத்தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கட்சி நிர்வாகிகள், தலைமை அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 23-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கலாம்.
முதல் நாளான இன்று மட்டும் நண்பகல் 12 மணி முதல் அதற்கான படிவங்களை பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் தலைமை அலுவலகத்தில் வழங்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொதுவாக விருப்ப மனு தாக்கல் செய்யும் விண்ணப்பத்துடன் குறிப்பிட்ட தொகையை கட்ட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்படும். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பில் அது போன்று எதுவும் இல்லை. இது குறித்து அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறும்போது, அந்த தொகை விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.