திருவண்ணாமலை: மகா தீப மலையில் தீ வைத்த மர்ம நபர்கள்
வேகமாக பரவிய தீயால் ஏராளமான மூலிகை செடிகள், மரங்கள் எரிந்தன.;
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது மகா தீபம் ஏற்றப்படும். இந்த மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மகா தீபம் ஏற்றப்படும் இந்த மலையில் பல்வேறு அரிய வகை மூலிகை செடிகள் வளர்கின்றன.
கடந்த 3-ந்தேதி கார்த்திகை தீபத்தன்று மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 11 நாட்கள் தொடர்ந்து மலை உச்சியில் மகாதீபம் காட்சி அளித்தது. அதன்பின் மகா தீப கொப்பரை நேற்று காலை, மலை உச்சியில் இருந்து கோவிலுக்கு இறக்கி கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை இந்த மலையின் குறிப்பிட்ட பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவியது. இதனால் அங்குள்ள ஏராளமான மூலிகை செடிகள், மரங்கள் எரிய தொடங்கின. தகவலறிந்த திருவண்ணாமலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
வனத்துறையினரின் தீவிர முயற்சிக்கு பின்னர் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மலையில் தீ வைத்த மர்ம நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வனத்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.