சேலம்: சிவன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
சேலம்,
சேலம் சிவதாபுரம் மெயின்ரோடு திருமலைகிரி பகுதியில் சைலகிரீஸ்வரர், சைலாம்பிகா என்ற சிவன் கோவில் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த கோவிலில் அதேபகுதியை சேர்ந்த பக்தர்கள் தினமும் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கோவிலில் நித்திய பூஜையை பூசாரி முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது, கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலுக்குள் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. உண்டியலில் பக்தர்களின் காணிக்கை பணம் எவ்வளவு இருக்கும் என்பது தெரியவில்லை. இதுகுறித்து இரும்பாலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அதில், மதில் சுவரில் மர்ம நபர்கள் ஏறி கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த 4 பஞ்சலோக சிலைகளை எடுத்துக்கொண்டு உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் திருடியுள்ளனர். ஆனால் சாமி சிலைகளை எடுத்து சென்றால் போலீசில் மாட்டிக்கொள்வோம் என கருதிய மர்ம நபர்கள் சிலைகளை அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இதையடுத்து கைரேகை நிபுணர்களை போலீசார் வரவழைத்து மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், கோவில் அருகில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் திருடர்களின் உருவங்கள் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.