திருச்சியில் இருந்து சென்னைக்கு நாளை முதல் `ஏர்பஸ்' விமானம் இயக்கம்
ஏர்பஸ் விமானங்களில் 180 பேர் பயணிக்கலாம்.;
திருச்சி,
விமான சேவை
திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளாக புதுடெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களை இண்டிகோ நிறுவனம், ஏ.டி.ஆர். ரக விமானங்களை கொண்டு இயக்கி வருகிறது. இதில் குறிப்பாக சென்னைக்கு தினமும் 6 சேவைகளாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 7.35, 10.35, மதியம் 12.40, 2.55, இரவு 7.45, 10.15 மணி உள்ளிட்ட நேரங்களில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏ.டி.ஆர். ரக விமானத்தில் 76 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.
இந்த நிலையில் இந்த சேவைகளில் விமான நிறுவனத்தின் சார்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 10.35 மற்றும் மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் 2 சேவைகளை மட்டும் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் 31-ந் தேதி வரை இண்டிகோ நிறுவனம் `ஏர்பஸ்' விமானங்களை கொண்டு இயக்க உள்ளது. ஏர்பஸ் விமானங்களில் 180 பேர் பயணிக்கலாம். மற்ற சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிக இருக்கைகள்
இதனால் அந்த இரண்டு நேரங்களில் மட்டும் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளது. விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதிக இருக்கைகளை கொண்ட `ஏர்பஸ்' விமானமாக இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவைகள் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்குமா? என்பது அந்த விமானங்கள் இயக்கப்படும்போதே தெரியவரும்.