தூத்துக்குடி: கோவில் அர்ச்சகர் வீட்டில் கதவை உடைத்து 107 சவரன் நகைகள் கொள்ளை

குலசேசரன்பட்டினம் அர்ச்சகர் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு 107 சவரன் தங்க, வைர, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.;

Update:2025-08-15 10:23 IST

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோவில் தலைமை அர்ச்சகரான குமார் பட்டரின் வீடு, கோவில் பின்புறம் கீழமலையான் தெருவில் உள்ளது. கடந்த ஜூன் 16ம்தேதி உடல்நலக் குறைவால் குமார் பட்டர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மனைவி பிரியா உள்ளிட்ட குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு நெல்லையில் உள்ள வீட்டுக்குச் சென்றிருந்தனர்.

அவர்கள் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 13) மீண்டும் வீடு திரும்பியபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு 107 சவரன் தங்க, வைர, வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளை போன தங்க நகைகளின் மதிப்பு சுமார் ரூ.53.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். குலசேகரன்பட்டினம் கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்