தூத்துக்குடி: விவசாயிகள் வாழைப் பயிருக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம்- கலெக்டர் தகவல்
நடப்பாண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்திட KSHEMA காப்பீட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.;
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நடப்பாண்டில் (2025-2026) பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்திட KSHEMA காப்பீட்டு நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாழைப்பயிருக்கு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி (16.9.2025) காப்பீடு செய்ய கடைசி நாளாக அரசினால் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட தேதிக்குள் இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வாழை பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய பிரிமீயம் தொகை ஏக்கருக்கு ரூ.4,480 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியான விவசாயிகளுக்கு மகசூல் இழப்பீட்டின் அடிப்படையில் காப்பீட்டு இழப்பீடு தொகை சம்பந்தப்பட்ட நிறுவனம் மூலம் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்யும் போது விவசாயியின் பெயர், வங்கிக் கணக்கு எண், சாகுபடி செய்த கிராமத்தின் பெயர், சாகுபடி செய்த பயிரின் பரப்பு, புல எண், முழு முகவரி ஆகிய விபரங்களை சரிபார்த்த பின்பு பொது இ சேவை மையங்களில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் வங்கி கணக்கு புத்தகத்தில் உள்ள பெயருக்கும், ஆதார் அட்டையில் உள்ள பெயருக்கும் இடையே வேறுபாடு காணப்படின் ஆதார் அட்டையில் உரிய திருத்தங்கள் மேற்கொண்ட பின் இணையத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். மாவட்ட கண்காணிப்பு குழு அறிவுறுத்தலின்படி, பொது இ சேவை மையங்களில் பயிர் காப்பீடு செய்ய வரும் விவசாயிகள் அடங்கல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது என்ற முத்திரையிடுதலினை பொது இ சேவை மையங்கள் கடைபிடிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதன் மூலம் ஏற்கெனவே காப்பீடு செய்யப்பட்ட அடங்கல் பதிவுகள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படாத வகையில் பாதுகாக்கப்பட்டு பயனாளிக்கு இழப்பீடுத் தொகை விரைந்து கிடைக்க பொது இ சேவை மையங்களும் பங்களிப்பு நல்கி இத்திட்டத்தினை பயனுள்ள வகையில் பயனாளிகள் பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.