‘மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள்’ - கருணாஸ்
முன்னாள் முதல்-அமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் நடித்து புகழ்பெற்றவர்கள்தான் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.;
சிவகங்கை,
சிவகங்கையில் நடிகர் கருணாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சினிமாவில் நடித்தால் முதல்-அமைச்சராகி விடலாம் என்ற எண்ணத்தில் பலர் வருகிறார்கள் என சீமான் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தபோது அவர் கூறியதாவது;-
“சினிமாவில் நடித்தால் முதல்-அமைச்சர் ஆகி விடலாம் என்று நினைக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் தமிழ்நாட்டில் அது நடந்திருக்கிறது. முன்னாள் முதல்-அமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் நடித்து புகழ்பெற்றவர்கள்தான்.
சினிமா மட்டுமின்றி, எந்த துறையில் இருந்தும், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கும் உரிமை. இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அந்த உரிமை இருக்கிறது. அதை இல்லை என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.
ஆனால் இப்போது வந்திருக்கும் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் என்ன? மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு அவர் கையாள்கிறார்? குறிப்பாக கரூரில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தபோது அவரது செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதை பார்த்துதான் இன்று பலரும் பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
அரசியல் என்பது மக்களுக்கானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர்கள்தான் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். அந்த அதிகாரம் மக்களுக்கானது. அவ்வாறு இருக்கும்போது, ஒரு அமைச்சராகவோ, முதல்-அமைச்சராகவோ வர வேண்டும் என்று நினைப்பவர், மக்களுக்கு பிரச்சினை என்று வரும்போது ஓடி ஒளிவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மக்கள் பிரச்சினையை மக்களோடு மக்களாக நின்று சந்திக்க திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள்.”
இவ்வாறு கருணாஸ் தெரிவித்துள்ளார்.