டிட்வா புயல், கனமழை எதிரொலி; தமிழகத்தில் இளம்பெண் உள்பட 5 பேர் பலி

நாகை மாவட்டம் வெண்மணச்சேரி தென்பாதி கீழத்தெரு பகுதியை சேர்ந்த சரோஜா (வயது 60) வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கி பலியானார்.;

Update:2025-12-01 09:20 IST

உள்படம்  மேல் வரிசை:  ரேணுகா, பிரதாப்; கீழ் வரிசை:  சரோஜா, பலவேசம், சுப்பிரமணி

வங்க கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையை புரட்டி போட்டதுடன், தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து, பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சியை சேர்ந்த முத்துவேல் (வயது 56) என்பவர் கூலித்தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி சீதா(45), இவர்களுடைய மகள்கள் கனிமொழி(21), ரேணுகா(20). இளைய மகள் ரேணுகா டிப்ளமோ அக்ரி படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்தார்.

கனமழையால் இவர்களது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ரேணுகா உள்ளிட்ட 4 பேரும் சிக்கிக்கொண்டனர். உடனே அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ரேணுகா உயிரிழந்து விட்டார். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள செம்பதனிருப்பை சேர்ந்த பிரதாப் (வயது 19) என்ற வாலிபர், பலத்த மழையால் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.

நாகை மாவட்டம் வெண்மணச்சேரி தென்பாதி கீழத்தெரு பகுதியை சேர்ந்த சரோஜா (60) என்பவர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும், விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள பெரமண்டூர் கிராமவாசியான தொழிலாளி சுப்பிரமணி (55) என்பவர் மின்சாரம் தாக்கியும் பலியானார்கள்.

இதுதவிர, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பரும்பு பகுதியை சேர்ந்தவர் பலவேசம் (வயது 85). இவர் 100 நாள் வேலை திட்டப்பணிக்கு சென்று வந்தார். கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பலவேசம் தங்கியிருந்த வீட்டின் சுவர் வலுவிழந்து இருந்தது. நேற்று முன்தினம் பகலில் சுவர் இடிந்து விழுந்து பலவேசம் உயிரிழந்தார். டிட்வா புயலால் ஏற்பட்ட பலத்த மழையில் சிக்கி தமிழகம் முழுவதும் 5 பேர் பலியாகி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்