சத்தியமங்கலம் அருகே பைக்கில் சென்ற தம்பதி மீது பாய்ந்த புலி-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

பண்ணாரி அருகே சாலையோரம் நின்ற புலி மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதி மீது பாய்ந்தது. இதில் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.;

Update:2025-11-04 21:43 IST

சத்தியமங்கலம்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஏராளமான விலங்குகள் இருக்கின்றன. இதில் தண்ணீரை தேடி யானை, சிறுத்தை, புலி ஆகியவை வனப்பகுதி வழியாக செல்லும் திண்டுக்கல்- மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து விடுகின்றன. இந்நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து ஒரு புலி வெளியேறியது. பின்னர் அந்த புலி பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் வந்து கம்பீரமாக உட்கார்ந்து இருந்தது. கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் புலியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அப்போது திம்பத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு ஒரு தம்பதி மோட்டார் சைக்கிளில் பண்ணாரி அருகே வந்து கொண்டு இருந்தனர். அவர்களை நோக்கி திடீரென புலி பாய்ந்தது. மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த பெண் புலியை பார்த்து அதிர்ச்சி அடைந்து கீழே குதித்தார். அப்போது உறுமியபடி அவர்களை நோக்கி புலி வந்தது. இருவரும் அலறி துடித்தனர்.

அவர்களது அலறல் சத்தத்தால் காட்டுக்குள் சென்று விட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தம்பதி நிம்மதி பெருமூச்சு விட்டபடி அங்கிருந்து வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். இந்த காட்சியை அந்த வழியாக காரில் வந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. திம்பம் மலைப்பாதையில் யானைகள், சிறுத்தைகள் மட்டுமே அடிக்கடி சுற்றித்திரியும். இந்நிலையில் ரோட்டோரம் நின்ற புலி தம்பதி மீது பாய்ந்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்