இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 05-03-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்யும் இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக தொடர்ந்த சிவில் வழக்கில் சாட்சி விசாரணைக்காக நடிகர் வடிவேலு சென்னை மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி உள்ளார்.
அமைச்சர் பொன்முடி மார்ச் 19-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிவத்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 2006-2011-ல் திமுக ஆட்சியில் ரூ.28.26 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.
ஒசூர் அருகே 3-ம் வகுப்பு மாணவர் நித்தின் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். காப்பாற்றச்சென்ற தலைமையாசிரியர் கவுரி சங்கரும் பரிதாபமாக உயிரிழந்தார். விளைநிலத்தில் தண்ணீரை சேமிப்பதற்காக தொண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இருவரும் உயிரிழந்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே ஜல்லிக்கட்டுக் காளை நெஞ்சில் முட்டி 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். காளையின் உரிமையாளர் பந்தயம் கட்டியதே உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். நேற்று மாலை மாணவன் தீரன் பெனடிக் வீடு திரும்பும் போது, காளையை தொட்டால் ரூ.250 தருவதாக அதனை வளர்க்கும் சுரேஷ் என்பவர் பந்தயம் கட்டியதாலேயே, மாட்டை தொட முயற்சித்து நெஞ்சில் முட்டியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும், காலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிவாஜியின் வீட்டில் எனக்கு எந்த பங்கும் இல்லாததால் வீடு ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் கோரிக்கை வைத்துள்ளார். ஜப்தி உத்தரவை ரத்துச்செய்யக்கோரி மனுதாக்கல் செய்ய ராம்குமார் தரப்புக்கு ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.