இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-06-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
ஜூன் 15ஆம் தேதி 2 கட்டங்களாக நடைபெறவிருந்த நீட் முதுநிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரே கட்டமாக ஆன்லைனில் தேர்வுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தேவை என்பதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய செஸ் விளையாட்டின் பெருமையான தருணம். குகேஷின் செஸ் பயணத்தில் மைல்கல். நார்வே செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷுக்கு வாழ்த்துகள். உலக செஸ் போட்டிகளில் இந்தியாவின் நிலையான எழுச்சிக்கு மற்றுமொரு படி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிக்கிம் மாநிலம் சாட்டனில் உள்ள ராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்டு 3 வீரர்கள் உயிரிழந்தனர். மங்கன் மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. ஹவில்தார் லக்விந்தர் சிங், லான்ஸ் நாயக் முனிஷ் தாக்கூர், போர்ட்டர் அபிஷேக் லகாடா ஆகிய 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
அமைச்சர் தா.மோ. அன்பரசன், கல்வி தொடர்பான நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். மூவரசம்பட்டு பள்ளி நிகழ்வில் அமைச்சர் தாமதமாக வந்ததால் மாணவிகள் காத்திருக்க வைக்கப்பட்டனர். அமைச்சர் அன்பரசன் பங்கேற்ற பள்ளி நிகழ்ச்சியில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை பூந்தமல்லி- பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தட திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. பூந்தமல்லி- பரந்தூர் வரை 52.94 கி.மீ. நீளத்திற்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பூந்தமல்லி- சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ.க்கு மெட்ரோ உயர் மேம்பாலம்; ரூ.8,779 கோடிக்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்க கொள்கை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
காலையில் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.880 ஆக அதிகரித்து ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.72,480க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை மாலையில் ரூ.110 உயர்ந்து ரூ.9,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கத் தொடங்கவுள்ளேன் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
- வந்தே பாரத் ரயில் மீது தாக்குதல் - குழந்தை காயம்
- உத்தரப் பிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரயிலுக்குள் அமர்ந்திருந்த சிறுவன் காயம் அடைந்துள்ளான். பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.