குற்றாலம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு தொடர்மழை பெய்தது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த 2 அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இருப்பினும் அவர்கள் பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக பழைய குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குற்றால அருவிகளில் தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மெட்ரோ நிர்வாகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கோயம்பேடு -அசோக் நகர் இடையே (பச்சை வழித்தடம்) மெட்ரோ ரெயில் சேவையில் தற்காலிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது.
கோயம்பேடு மற்றும் அசோக் நகர் பகுதிகளுக்கு இடையே ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் சென்னை சென்டிரல் இடையே நேரடி ரெயில் சேவையில் 24 நிமிட தாமதத்துடன் இயக்கப்படுகின்றன. எனினும், நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவைகள் அட்டவணைப்படி இயங்குகின்றன.
அந்தமான் நிகோபர் தீவில் கடல் பகுதியில், இன்று அதிகாலை 1.43 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.
ஈரானில் சிக்கி தவித்த 282 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் அந்நாட்டில் இருந்து அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மஷாத் நகரில் இருந்து, இன்று அதிகாலை 1 மணியளவில், டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். இதனால், ஈரானில் இருந்து இதுவரை 2,858 இந்திய நாட்டினர் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.
இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் பதிவு தெரிவிக்கின்றது. இந்தியாவுக்கு வந்தடைந்ததும் அவர்கள், மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
தமிழகத்தில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.