இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-06-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
மதுரை செய்தியாளர்கள் சந்திப்பில் அரசியல் வரவு குறித்த கேள்விக்கு நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியதாவது:-
பிரபலம் ஆகிவிட்டேன் என்பதற்காக நான் அரசியலுக்கு வர முடியாது. எனக்கு அரசியல் அறிவு கிடையாது. 50 வயது ஆகிவிட்டது, இனிமேல் அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அரசியல் வடிவில் அதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை என்றார்.
வேலூர் மாவட்டத்தில் 21,766 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வேலூர் சுற்றுலா மாளிகையில் நடந்த நிகழ்வில், 12 பேருக்கு பட்டா வழங்கி முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இன்ஸ்டாவில் பதிவு போடுவதில் யார் பெரிய ஆள்? என போட்டியில் பள்ளி மாணவிகள் சாலையில் அடிதடியில் இறங்கியதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சண்டையைத் தடுக்க முயன்றவர்களையும் சேர்த்து திட்டிய மாணவிகள் வீடியோ இணையத்தில் தீயாய் பரவுகிறது.
கனிமவள லாரி ஓட்டுநர்களிடம் ஜிபே மூலம் பணம் பெற்றதாக வந்த புகாரில் 7 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் ஸ்டான்லி, ஆயுதப் படை காவலர் ஷிபு, தலைமை காவலர் சாலமன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தவெக நிகழ்ச்சி என்றால் யாரும் இடம் தரக்கூடாது எனச் சொல்லும் தமிழக அரசு மாநாடு முடிந்த பிறகு, தொண்டர்கள் எறும்புபோல அனைத்து இடத்திலும் உள்ளதை புரிந்துகொண்டனர். தவெகவினர் மீது பொய் வழக்குகளைப் போட்டு வருகின்றனர் என்று தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். 2006ம் ஆண்டு தேர்தல் சமயத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய விடாமல் தடுக்க முயன்ற அதிமுக தொண்டர் முருகானந்தம் வெட்டிக் கொலை கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட 15 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனைவரும் விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 20,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவிகளில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.