அரசு பஸ்கள் மோதலில் பலியான திருச்சி மாணவி.. கல்லூரிக்கு புறப்பட்டு வந்தபோது நேர்ந்த சோகம்

பலியான மாணவியின் உடலை பார்த்து பெற்றோர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.;

Update:2025-12-02 07:47 IST

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதில் காரைக்குடி அரசு மருத்துவமனையில் 4 பேர் உடல்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஒரு இளம்பெண்ணின் உடல் மட்டும் அடையாளம் காணப்படாமல் இருந்தது. இந்த நிலையில் நீண்ட விசாரணைக்கு பின்னர் அவர், திருச்சி மாவட்டம் சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்த டயானா(வயது 17) என்று தெரியவந்தது.

இவர் காரைக்குடி அழகப்பா அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார். விடுமுறைக்கு ஊருக்கு சென்றுவிட்டு மீண்டும் கல்லூரிக்கு திரும்பி வந்தபோது டயானா விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார். இதுபற்றி மாணவி டயானாவின் பெற்றோருக்கு உடனடியாக தெரியவில்லை. விபத்து நடந்ததை கேள்விப்பட்டு, மகளின் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் போன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பஸ்கள் மோதலில் பலியான மாணவியின் உடலை போலீசார் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டனர். அதன்பின்னரே பெற்றோருக்கு இந்த தகவல் தெரியவந்தது. மகள் கல்லூரிக்கு சென்று இருப்பாள் என்று நினைத்திருந்த பெற்றோருக்கு அவர் இறந்த தகவல் பேரிடியாக அமைந்தது. அதன்பின்னர் பெற்றோர் அவரது உறவினர்கள் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். மகளை பிணமாக பார்த்து பெற்றோர் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்