போர் காரணமாக ஈரோட்டில் இருந்து ஈரானுக்கு மஞ்சள் ஏற்றுமதி பாதிப்பு
பரப்பளவை பொறுத்து மஞ்சள் விலையில் மாற்றம் வரலாம் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.;
ஈரோடு,
தமிழ்நாட்டிலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியாக மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இங்கு ஈரோடு, பெருந்துறை, சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், ஈரோடு, கோபி கூட்டுறவு சங்கங்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
சீசனின்போது 6 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மூட்டைகள் மஞ்சள் விற்பனைக்கு வந்தது. தற்போது 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் மூட்டைகள் ஏலத்துக்கு வருகிறது. கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.13 ஆயிரம் வரையும், விரலி மஞ்சள் ரூ.14 ஆயிரம் வரையும், சேலம் பெருவெட்டு மஞ்சள் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை ஆகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சீசன் என்பது பிப்ரவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை ஆகும். கடந்த ஆண்டு சீசனின் போது ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.17 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விலை போனது. இந்த ஆண்டு ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டில் தற்போது விலையில் பெரிய அளவில் ஏற்ற, இறக்கம் இல்லை. ஈரோடு மஞ்சள் வங்காளதேசம், ஈரான், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது இஸ்ரேல்-ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து ஈரானுக்கு மஞ்சள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான மஞ்சள் சாகுபடி தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. பரப்பளவை பொறுத்து மஞ்சள் விலையில் மாற்றம் வரலாம் என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.