தவெக மாநாடு நிறைவு: மதுரை பாரபத்தி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

மாநாடு நடைபெற்ற பாரபத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.;

Update:2025-08-21 19:22 IST

சென்னை,

தமிழக வெற்றிக் கழகக் கட்சியை விஜய் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த அக்டோபர் 27-ந்தேதி கட்சியின் முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார். அந்த மாநாட்டில் விஜயின் பேச்சும், அணுகுமுறையும் அரசியல் வல்லுநர்களை உற்று கவனிக்க வைத்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது த.வெ.க.வின் பார்வை தென் மாவட்டங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் அதிக இடங்களை பிடிக்கும் அணிகளே ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. எனவே தி.மு.க., பா.ஜ.க.வை தொடர்ந்து தற்போது த.வெ.க.வும் மதுரை மற்றும் தென் மாவட்டங்களை குறிவைத்திருக்கிறது. அதன்படி விஜய், த.வெ.க.வின் 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டார்.

அதன்படி த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று மாலை நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க நேற்று முதலே தொண்டர்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இன்று காலையில் மதுரை–தூத்துக்குடி சாலையில் எங்கு பார்த்தாலும் தவெகவினர் வாகனங்களாக வந்து கொண்டிருந்தனர்.

மாநாடு பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கிய நிலையில், 6 மணிக்கு முன்பாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. மாநாட்டில் விஜய் ராம்ப் வாக் முடிந்ததும் தொண்டர்கள் வெளியேறத் தொடங்கினர். விஜய் உரையாற்றிய பிறகு மாநாடும் முடிந்தது. இதையடுத்து ஒரே நேரத்தில் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறினர். இதனால், மாநாடு நடைபெற்ற பாரப்பத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எலியார்பத்தி சாலையில் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்