வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் உயிரிழப்பு

7வது மலையில் பெண் பக்தர் ஒருவரும், 5வது மலையில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-05-25 17:59 IST

கோப்புப்படம்

கோவை,

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிதீவிரமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்து உள்ளது. அந்த வகையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

மேற்குதொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது. இந்த சூழலில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் வெள்ளியங்கிரி மலையில் ஏற பக்தர்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதன்படி மறு அறிவிப்பு வரும் வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்தது. மலைப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும், பரளிக்காடு, பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலா தலங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வெள்ளியங்கிரி மலை ஏறிய இரண்டு பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி 7வது மலையில் பெண் பக்தர் ஒருவரும், 5வது மலையில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் உயிரிழந்த பெண் காரைக்காலை சேர்ந்த கவுசல்யா மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

நடப்பாண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலை ஏறி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் இதய பிரச்சினை, சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்சனை இருந்தால் மலை ஏறக்கூடாது என்று வனத்துறை ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்