உங்களுடன் ஸ்டாலின் போட்டிகள்: வெற்றி பெற்ற 36 நபர்களுக்கு சான்றிதழ் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் சார்பில் ‘உங்களுடன் ஸ்டாலின் போட்டிகள்’ நடத்தப்பட்டன.;

Update:2025-11-27 16:37 IST

சென்னை,

உங்களுடன் ஸ்டாலின் போட்டிகளில் வெற்றி பெற்ற 36 நபர்களுக்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அமைச்சர் மு. பெ.சாமிநாதன் சான்றிதழ்களை வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து இன்று வரை உருவாக்கி செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்கள் எண்ணற்றவை. அந்த திட்டங்களின் வாயிலாக தமிழ்நாட்டின் பல கோடி மக்கள் பயன்பெற்று தன்னிறைவு பெற்றுள்ளனர். அதில் முக்கியமான திட்டமாக “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” 15-07-2025 முதல் செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டம் மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள சிந்தனை மற்றும் மாற்றங்கள் குறித்து மக்களின் உணர்வுகளை அறியும் விதமாக, “ உங்களுடன் ஸ்டாலின் போட்டிகள்” என்ற தலைப்பில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் நடத்தியது. அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 36 நபர்களுக்கு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்கள் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.

“மக்களிடம் செல்; அவர்களோடு வாழ்; அவர்களை நேசி” என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கைப் பாதையில் தமிழ்நாடு அரசு மக்களின் மீது கொண்டிருக்கும் அக்கறைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக “உங்களுடன் ஸ்டாலின்” என்ற புதிய திட்டத்தினை முதல்-அமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகளின் 46 சேவைகளும் மக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் மிக விரைவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கொண்டு சேர்ப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15-07- 2025 முதல் நவம்பர் மாதம் 2025 வரை 10 ஆயிரம் முகாம்கள் என்ற இலக்குடன் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

“சாதிச்சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய, இருப்பிடச்சான்று, சிறு குறு விவசாயிகள் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, பிறப்பு- இறப்புச்சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை,மருத்துவ உதவிகள், எரிசக்தித்துறை உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உதவிகள், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உதவிகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை உதவிகள், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை உதவிகள், மீன் வளத்துறை உதவிகள் போன்ற பல கோரிக்கைகளுக்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி அலுவலர்கள் நேரடியாக மக்கள் இருப்பிடங்களுக்கே சென்று தீர்வுகளை வழங்கி வருகிறார்கள்.

மேலும் முன்மாதிரியான பல்வேறு முன்னெடுப்புகள் மூலம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக ஒன்றிய அரசின் விருதுகளை வாங்கி குவித்து வருகிறது. இப்படியாக தமிழ்நாடு, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கிறது. வளர்ச்சி என்பது, ஒரு தனிநபரோ அல்லது சமூகமோ, தங்களின் தற்போதைய நிலையை விட மேம்பட்ட நிலையை அடைவதற்கான ஒரு உயர்ந்த நோக்கமாகும். இது உடல், உளவியல், சமூக மற்றும் பொருளாதார அம்சங்களை உள்ளடக்கியது என்பதை தமிழ்நாடு அரசு உணர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதனை உணர்த்தும் வண்ணம் உங்களுடன் ஸ்டாலின் அறிவுசார் போட்டிகள் என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் சமூக ஊடகங்களான ‘எக்ஸ்’ தளம்(X), படவரி(Instagram), முகநூல்(Facebook), புலனம் (WhatsApp), வலையொளி(YouTube) வாயிலாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்துப் போட்டிகளிலும் 4,732 நபர்கள் கலந்து கொண்டனர். அதில் 36 நபர்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், நேரில் பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி சிறப்பித்தார். இந்நிழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜராம், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர்(செய்தி) எஸ்.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர்/இணை இயக்குநர் (சமூக ஊடகம்) அ.வே. சுரேந்திரன், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர்கள் மற்றும் ஊடக மைய அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்