நிழல் ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ ஹீரோவாக இருப்பவர் வைகோ: நடிகர் சத்யராஜ்
வைகோவின் சமத்துவ நடைபயண நிறைவு விழா நேற்று மதுரையில் நடந்தது.;
மதுரை,
போதைப்பொருள் ஒழிப்பு, சாதி, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கடந்த 2-ந்தேதி திருச்சியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சமத்துவ நடைபயணத்தை தொடங்கினார். இதனை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில், மதுரை ஓபுளாபடித்துறை பகுதியில் பொதுக்கூட்டத்துடன், சமத்துவ நடைபயண நிறைவு விழா நடந்தது. விழாவில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்தார். இதில் துரை வைகோ எம்.பி. மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், பூமிநாதன் எம்.எல்.ஏ., தளபதி எம்.எல்.ஏ., நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் சத்யராஜ் பேசுகையில், சாதாரண மனிதர்கள் வியந்து பார்க்கும் மாமனிதர் வைகோ. தமிழக மக்களுக்காக 6 ஆயிரம் கி.மீ. நடந்துள்ளார். நிழல் ஹீரோக்களுக்கு மத்தியில் நிஜ ஹீரோவாக இருப்பவர் வைகோ. தமிழகத்தில் சமூகநீதி ஆட்சி சரியான வளர்ச்சி பாதையில் செல்கிறது. உலகிற்கு முன் உதாரணமாக தமிழகம் திகழ, இந்த ஆட்சி தொடர வேண்டும். இந்த ஆட்சியில் குறைகள் இருந்தாலும் அதுவும் சரி செய்யப்படும் என்று கூறினார்.