புதுச்சேரியிலிருந்து பொள்ளாச்சி சென்ற ஆம்னி பஸ்சில் பயங்கர தீ விபத்து: பயணிகள் உயிர்தப்பினர்
தீயில் உருக்குலைந்த பஸ்சில் இருந்த பயணிகளின் உடமைகள் எரிந்து நாசமானது.;
புதுச்சேரி,
புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு நேற்று இரவு 9 மணியளவில் தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சில் 13 பயணிகள் இருந்தனர். வேல்ராம்பட்டை சேர்ந்த செந்தில்குமார் டிரைவராக இருந்தார்.
புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பிய சிறிது தூரத்தில் உள்ள 100 அடி சாலை மேம்பாலத்தில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது பஸ்சின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதை, எதிரே வந்த ஆட்டோ டிரைவர் பார்த்து, பஸ் டிரைவரிடம் எச்சரிக்கை செய்தார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். அப்போது பஸ்சின் உள் பகுதியில் புகை சூழ்ந்து கொண்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அபயகுரலுடன் பஸ்சில் இருந்து அவசர அவசரமாக வெளியே இறங்கினர். உயிர் பயத்தில் சிலர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தனர். பயணிகள் அனைவரும் இறங்கிய சற்று நேரத்தில் பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. நேரம் ஆக ஆக தீ மளமளவென பற்றி எரிந்தது. இதனால் 100 அடி பாலத்தில் வந்த மற்ற வாகனங்கள் பாதியில் நிறுத்தப்பட்டன.
இதுபற்றி தகவல் அறிந்த புதுவை தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பஸ் அருகே நெருங்க முடியாத அளவுக்கு தீ கொழுந்துவிட்டு எரிந்தது. சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் இருந்தபடி தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.
தகவல் அறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் கலைவாணன், நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து, தீயில் உருக்குலைந்த பஸ்சை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பஸ்சில் இருந்த பயணிகளின் உடமைகள் எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓடும் பஸ்சில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.