வால்பாறை நகராட்சி கவுன்சில் கூட்டத்தை வீடியோ பதிவு செய்ய வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
வீடியோ பதிவை செப்டம்பர் 3-ந்தேதி தாக்கல் செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.;
கோப்புப்படம்
சென்னை ஐகோர்ட்டில், வால்பாறை நகராட்சி கவுன்சிலர்கள் சி.வீரமணி, ஜெ.மணிகண்டன், ஆ.எஸ்.அன்பரசன், பி.செல்வகுமார் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது:-
வால்பாறை நகராட்சித் தலைவர் அழகு சுந்தரவளளி, அவரது கணவர் செல்வம் ஆகியோர் நகராட்சியின் அனைத்து நடவடிக்கையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நகராட்சி நடவடிக்கையில் ஏராளமான முறைகேடு நடக்கிறது. நகராட்சியிடம் சுமார் ரூ.200 கோடி நிதி உள்ளது. இந்த தொகையை பல்வேறு திட்டங்களின் பெயரில் சுருட்டப்படுகிறது. இதை எதிர்த்து கேள்வி கேட்கும் கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு எந்த நல திட்டங்களையும் செய்வது இல்லை. கவுன்சில் கூட்டத்துக்கு கூட அழைப்பு விடுப்பது இல்லை.
நகராட்சி தலைவர் பெயரில் அவரது கணவர் செய்யும் முறைகேடுகளுக்கு அதிகாரிகளும் துணை போகின்றனர். இதனால், நகராட்சி தலைவருக்கு எதிராக கடந்த மே மாதம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாங்கள் உள்பட 10 கவுன்சிலர்கள் கொண்டு வந்தோம். இதற்கான கூட்டம் கடந்த 7-ந்தேதி நடந்தபோது, போலீசார் குவிக்கப்பட்டனர். கவுன்சிலர்களை போலீசார் உள்ளே அனுமதிக்காமல் தடுத்தனர். இதுகுறித்து விசாரித்தபோது, நகராட்சி கமிஷனர்தான் எங்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டதாக போலீசார் கூறினர்.
அதேநேரம், கவுன்சிலர்கள் வராததால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கூட்டம் ரத்து செய்து விட்டதாக டி.வி.சேனலுக்கு நகராட்சி கமிஷனர் கணேசன் பேட்டி கொடுத்தார். ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி நிர்வாகத்துறை கமிஷனர், கோவை கலெக்டர் உள்ளிட்டோருக்கு புகார் மனு கொடுத்துள்ளோம்.
இந்த நிலையில், 99 தீர்மானங்களை நாளை நடைபெற உள்ள கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்போவதாக கடந்த 19-ந்தேதி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பொதுவாக நகராட்சி கவுன்சில் கூட்டத்துக்கு செல்லும் கவுன்சிலர்களிடம் வருகை பதிவேட்டில் கையெழுத்து வாங்குவார்கள். நகராட்சி ஊழியர் தீர்மானம் குறித்து ஒரு வரி வாசித்து விட்டு உட்கார்ந்து விடுவார். தீர்மானம் குறித்து கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினால், அவர்களை உட்காரும்படி உத்தரவிடும், நகராட்சி தலைவி கூட்டம் முடிந்து விட்டதாக அறிவித்து விடுவார். கூட்டமே ஜனநாயகத்துக்கு எதிராக நடந்து வருகிறது.
எனவே, நாளை நடைபெறும் கவுன்சில் கூட்டத்தை வீடியோ படப்பதிவு செய்யவும், செல்போன், கைக்கடிகாரம், பேனா, பென்சில், குறிப்பு எடுக்க நோட்டு உள்ளிட்டவைகளை எடுத்து செல்ல அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி என்.மாலா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள 99 தீர்மானங்களை இயற்ற உள்ளதாகவும், ஏற்கனவே, கவுன்சில் கூட்டத்தை தன்னிச்சையாக ரத்து செய்ததாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த தீர்மானங்கள் எல்லாம் ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக நிறைவேற்ற வேண்டும் என்பதால், நாளை நடைபெறும் கவுன்சில் கூட்டத்தை வீடியோ படம் எடுக்கும்படி நகராட்சி கமிஷனர், தலைவருக்கு உத்தரவிடுகிறேன். இந்த வீடியோ பதிவை வருகிற செப்டம்பர் 3-ந்தேதி தாக்கல் செய்யவேண்டும்" என்று கூறியுள்ளார்.