'இந்தியா' கூட்டணியில் வி.சி.க.வும், காங்கிரசும் நீண்டகாலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன - செல்வப்பெருந்தகை
பா.ம.க. நிறுவனரை கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைக்கவில்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணி கட்சிகளில் வி.சி.க.வும், காங்கிரசும் நீண்டகாலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்று காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசை கடந்த 29.06.2025 அன்று தைலாபுரத்தில் அவரின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து, நலன் விசாரித்தேன். பின்னர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, அவரை சந்தித்து நலன் விசாரிக்கவே வந்தேன் என்றும், அதில் எந்தவித அரசியலும் இல்லை என்றும் தெளிவாகக் கூறினேன். மருத்துவர் ராமதாசும் இந்த சந்திப்பு குறித்து பேசும் பொழுது, நலன் விசாரிக்கவே வந்தார் என்றும், இதில் அரசியல் துளியும் இல்லையென்றும் கூறியிருந்தார். இன்று மாலை சில பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் நான் சொல்லாத செய்தியை சொன்னதாக முன்னுக்குப்பின் முரணாக செய்திகள் வந்துள்ளன.
பா.ம.க. நிறுவனரை கூட்டணிக்கு வாருங்கள் என்று நான் அழைக்கவில்லை. ஆனால், இதை சில அரசியல் கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்கள் திரித்து பேசி, விவாதப் பொருளாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணி கட்சிகளான தி.மு.க., இந்திய தேசிய காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ., வி.சி.க., தமிழக வாழ்வுரிமைக்கட்சி, இந்திய தேசிய முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இணைந்து வெற்றி கூட்டணியாக எக்கு கோட்டையாக செயல்பட்டு வருகிறது என்று பல இடங்களில் தொடர்ந்து கூறிவருகிறேன்.
ஒரு மூத்த அரசியல் கட்சியின் தலைவரை நேரில் சந்தித்த நிகழ்வை கொச்சைப்படுத்துவதும், விமர்சனம் செய்து அரசியல் ஆக்குவதும் வன்மம் மிகுந்த மனிதாபிமானமற்ற செயலாக நான் கருதுகிறேன். மருத்துவர் ராமதாஸ் உடனான சந்திப்பை அரசியல் ஆக்குவதையும், திரித்து பேசுவதையும், எழுதுவதையும் தவிர்க்க வேண்டுகிறேன். மருத்துவர் ராமதாஸ் உடனான சந்திப்பின்போது, கூட்டணி குறித்து விவாதித்தது போன்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் இருப்பது போன்றும் ஒரு பிம்பத்தை எழுப்புவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்.
அரசியல் களத்தில் மட்டுமின்றி தனிப்பட்ட முறையிலும் நானும், வி.சி.க. தலைவர் திருமாவளவனும் அண்ணன், தம்பியாக பழகி வருகிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 'இந்தியா' கூட்டணியில் புதியதாக ஒரு கட்சியை இணைப்பது குறித்து கூட்டணியின் தலைவரும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார்.
இந்திய தேசிய காங்கிரஸ் பேசுவதெல்லாம் எஸ்.சி, எஸ்.டி. ஓ.பி.சி. மைனாரிட்டி ஆகியவர்களின் ஒருங்கிணைப்பைப் பற்றிதான். தலைவர் ராகுல்காந்தியும் இதை வலியுறுத்திதான் பேசிவருகிறார். எந்த இடத்திலும் வன்மமான அரசியலோ, வன்மமான வார்த்தைகளோ காங்கிரஸ் பேரியக்கத்தினர் பேசியது கிடையாது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 'இந்தியா' கூட்டணியில் உறுதியுடன் தொடர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணி கட்சிகளில் வி.சி.க.வும், காங்கிரசும் நீண்டகாலம் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. மதவாத சக்திகளை எதிர்த்து போராடுவதில் ஒரணியில் ஒற்றுமையாக நிற்கின்றன. ஆனால், இன்று சில பத்திரிகைகளிலும், சமூகஊடகங்களிலும் 'இந்தியா' கூட்டணியில் குழப்பதை ஏற்படுத்தும் விதமாகவும், ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஊடகங்களும், பத்திரிகைகளும் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு வரலாற்று பிழை செய்து விட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்."
இவ்வாறு செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.