விஜய் அரசியலுக்கு புதுசு: அனுபவம் இல்லை- கஸ்தூரி தாக்கு
ஜனநாயகன் பட விவகாரத்தில் தி.மு.க.விற்கு இரண்டு லட்டு. ஒன்று விஜய்க்கு நஷ்டம். பழி பாஜக மீது போடப்படுகிறது என்று கஸ்தூரி கூறினார்.;
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில், பா.ஜனதா சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பா.ஜனதா கலை கலாசார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தாமல் இருந்தால் திரைப்படங்களுக்கு சென்சாரில் பாதிப்பு வராது. ஜனநாயகன் படம் கடந்த மே மாதமே முடிக்கப்பட்டு விட்டது.டிசம்பர் மாதம் வரை சென்சாருக்கு அனுப்பவில்லை. சூப்பர் ஸ்டார் அந்தஸ்து உள்ள நடிகராகவும், எதிர்பார்க்கப்படும் அரசியல் கட்சி தலைவராகவும் இருக்கும் விஜய் தி.மு.க., பாஜக ஆகிய கட்சிகள் அரசியலில் தனக்கு எதிரிகள் என்று கூறுகிறார்.
ஜனநாயகன் படத்திற்கு தடைகள் வரலாம் என அவர் முன்கூட்டியே யூகித்து இருக்க வேண்டும். ஜனநாயகன் படத்தில் ராணுவ அடையாளங்கள், தேசிய அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு என்.ஓ.சி. வாங்கவில்லை. விஜய் அரசியலுக்கு புதுசு. அரசியல் அனுபவம் இல்லை. ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்க தவறான வழிகாட்டுதல் காரணமாக நீதிமன்றத்திற்கு சென்று உள்ளனர்.
மத்திய அரசு நியாயமாக நடக்கிறது. ஜனநாயகன் பட விவகாரத்தில் தி.மு.க.விற்கு இரண்டு லட்டு. ஒன்று விஜய்க்கு நஷ்டம். பழி பாஜக மீது போடப்படுகிறது. தன்னுடைய படப்பிரச்சினைக்கே அமைதியாக உள்ள விஜய், மக்கள் பிரச்சினைக்கு எப்படி பேசுவார். த.வெ.க. நிர்வாகிகள் யாரும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிரான அத்தனை கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.