தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு எங்கே? வெளியான தகவல்
விஜய், தனது கட்சியின் தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்த புதிய திட்டத்தை வகுத்துள்ளார்.;
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க த.வெ.க. தீவிரமாக களம் இறங்கியுள்ளது. கரூர் கூட்ட நெரிசலுக்கு பிறகு, கட்சியின் மக்கள் சந்திப்பு கூட்டங்களை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக விஜய் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில், புதுச்சேரியில் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இதையடுத்து, ஈரோட்டில் கடந்த மாதம் 16ஆம் தேதி விஜய் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தினார்.
செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்த பிறகு நடைபெற்ற கூட்டம் என்பதாலும், கொங்கு மண்டலத்தில் நடைபெற்றதாலும், இந்தக் கூட்டத்தை செங்கோட்டையன் பிரமாண்டமாக நடத்திக் காட்டினார். ஈரோடு மக்கள் சந்திப்புக்குப் பிறகு, விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘ஜனநாயகன்’ பட வேலைகளில் அவர் தீவிரம் காட்டினார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் பிரச்சினையில் சிக்கி, பொங்கல் வெளியீடு சந்தேகமாகியுள்ள நிலையில், மறுபுறம் சிபிஐ விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதனால், பொங்கலுக்குப் பிறகு விஜய் தனது மக்கள் சந்திப்பு பிரசாரத்தை தீவிரப்படுத்துவார் என கூறப்படுகிறது. சேலம் அல்லது தர்மபுரியில் அவர் மக்கள் சந்திப்பு நிகழ்வை நடத்தலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த மக்கள் சந்திப்பை பிரமாண்டமாக நடத்தவும், தேர்தல் கமிஷன் கடந்த டிசம்பர் மாதம் தங்களுக்கு ஒதுக்கீடு செய்து அனுப்பிய தேர்தல் சின்னத்தை அறிமுகப்படுத்தவும் விஜய் திட்டமிட்டு வருகிறார். இதனால் த.வெ.கவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.