பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள கோர்ட்டை நாடுகிறார் விஜய்: வன்னி அரசு
இறந்து போனவர்களின் உடலை கூட இன்னும் அடக்கம் செய்யவில்லை என்று விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.;
கரூர்,
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சூழலில், இச்சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணியிடம் தவெக தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தவெக முறையீடு தொடர்பாக நாளை பிற்பகல் கோர்ட்டு விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அவசர அவசரமாக கோர்ட்டை விஜய் நாடியிருப்பதை விசிக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியிருப்பதாவது:
“சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டை நாடியுள்ளது தவெக. இறந்து போனவர்களின் உடலை கூட இன்னும் அடக்கம் செய்யவில்லை. அவர்களின் கண்ணீர் கூட வடிவது நிற்கவில்லை. அதற்குள்ளாகவே இந்த மரணங்களின் பொறுப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள கோர்ட்டை நாடுகிறார் விஜய். இது அப்பட்டமான அயோக்கியத்தனம். மக்கள் மன்றத்திற்கு பதில் சொல்ல அஞ்சி நீதிமன்றத்தை நாடுவது பாஜக அரசு காப்பாற்றும் என்னும் நம்பிக்கையில்தானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.