பெரம்பலூரில் விஜய் பிரசாரம் ரத்து
விஜய்யின் பரப்புரை வாகனம் சென்னை நோக்கி புறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.;
சென்னை,
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமது முதல் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை திருச்சியில் இருந்து தொடங்கினார். இதற்காக, சென்னையில் இருந்து இன்று காலை 8:50 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் தனியார் விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்தார். விமான நிலையத்தில் திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டு நின்ற தொண்டர்கள், விஜயை பார்த்ததும் “வருங்கால முதல்வர் வாழ்க… தளபதி வாழ்க” என வானதிரை முழக்கமிட்டனர்.
தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட விஜய், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தேர்தல் பிரசார வாகனத்தில் அமர்ந்து, பிரசார இடமான மரக்கடை நோக்கி புறப்பட்டார். அப்போது எதிர்பார்த்ததை விட தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவரது பிரசார வாகனம் மெதுவாக நகரும் நிலை ஏற்பட்டது. 7 கிலோமீட்டர் தொலைவை கடக்க 5 மணி நேரத்திற்கும் மேல் ஆனது. இதனால், திட்டமிட்ட நேரத்தை விட நீண்ட நேரம் கழித்தே விஜயின் பிரசாரம் திருச்சியில் நடைபெற்றது.
அரியலூரில் இதேபோல் தாமதம் ஏற்பட்டது. இதனால், குன்னம் மற்றும் பெரம்பலூர் கூட்டம் நடைபெற இரவு வெகுநேரமாகிவிடும் என கருதப்பட்டது. தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஜயின் வாகனம் மெதுவாகவே சென்றது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஆகியும் பெரம்பலூர் சென்றடைய முடியாத நிலையில், விஜய் தனது பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு திரும்பினார். இதனால் நள்ளிரவு வரை காத்திருந்த த.வெ.க. தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.