நாளை திருமணம்: பைக்கில் சென்ற புதுமாப்பிள்ளைக்கு எமனாக வந்த லாரி

நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் சேலம் அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-08-28 09:24 IST

சேலம்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி பாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைபையன். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 27). இவர் பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். மேலும் இரும்பு கடையும் நடத்தி வந்தார். இவருக்கு நாளை (வெள்ளிக்கிழமை) திருமணம் நடக்க இருந்தது.

புதுமாப்பிள்ளையான ராஜ்குமார் திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று முன்தினம் சேலம் வந்தார். பின்னர் சேலத்தில் இருந்து அன்று இரவு தனது வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.சேலத்தை அடுத்த காரிப்பட்டி அருகே உள்ள ராம்நகர் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமாருக்கு தலை உள்பட உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். விபத்தில் பலியான ராஜ்குமார் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.விபத்தில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்