நடுக்கடலில் படகு கவிழ்ந்து மாயமான மீனவரின் கதி என்ன? 3-வது நாளாக தேடும் பணி தீவிரம்

இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் 2 விசைப்படகுகள் மூலமும் தேடும் பணி நடந்தது.;

Update:2025-06-21 21:31 IST

மண்டபம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சர்புதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பரித் (வயது28), அனீஸ் (30), மாதவன் (28), இப்ராகிம் ஷா (40) ஆகிய 4 பேர் மீன்பிடிக்க கடந்த 18-ந் தேதி கடலுக்கு சென்றனர். அன்று நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென விசைபடகின் பலகை உடைந்து படகு கடலில் மூழ்க தொடங்கியது.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் கையில் கிடைத்த பொருள்களுடன் மிதந்தவாறு கடலில் தத்தளித்தனர். அப்போது அப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த சக மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்த பரித், அனீஸ், மாதவன் ஆகியோரை பத்திரமாக மீட்டனர். மீனவர் இப்ராகிம் ஷா மட்டும் கடலில் மாயமானார். சக மீனவர்கள் பல மணிநேரம் தேடியும் இப்ராகிம் ஷாவை கண்டுபிடிக்க முடிய வில்லை. கரைக்கு வந்த அவர்கள் நடந்த விபரங்களை கடலோர போலீசாரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் ரோந்து படகு மூலம் சம்பவம்நடந்த பகுதிக்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கு உதவியாக உள்ளூர் மீனவர்கள் கடலில் மாயமான மீனவரை தேடினர்.

மேலும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் 2 விசைப்படகுகள் மூலமும் தேடும் பணி நடந்தது. ஆனால் இப்ராகிம் ஷா கிடைக்கவில்லை. நேற்று வரை 2 நாள் முழுவதுமாக முடிந்த நிலையில் இதுவரை மாயமான மீனவர் குறித்து எவ்வித தகவலும் தெரியவில்லை. இதனிடையே, 3வது நாளாக இன்றும் மாயமான மீனவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் மெரைன் போலீசார் கூறுகையில், கடந்த இரு நாட்களாக மாயமான மீனவரை தொடர்ந்து தேடி வருகிறோம். இதுவரை அவர் குறித்த எவ்வித தகவலும் இல்லை. இருப்பினும் தொடர்ந்து தேடும் முயற்சியில் பட்டு வருகிறோம்.

கடலின் நீரோட்டம் காரணமாக ஒருவேளை அவர் வேறு எங்காவது கரை ஏறி இருக்கலாம். அப்படி அவர் கரையேறி இருந்தால் அது குறித்து தகவல் தெரிந்திருக்கும். இருப்பினும் இதுவரை அவர் குறித்த தகவல் தெரியாமல் உள்ளது துரதிஷ்டவசமானது. ஒருவேளை படகின் அடியில் கூட அவர் சிக்கி இருக்கலாம். நடுக்கடலில் மூழ்கிய படகை மீட்டால் விவரம் தெரிய வரும் என்றனர். 3 நாட்களாகியும் மீனவர் கிடைக்காததால் உறவினர்கள், கிராம மக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்