கள்ளத் துப்பாக்கி கலாசாரத்தை அடியோடு ஒழிப்பது எப்போது? - டி.டி.வி. தினகரன்
தமிழக அரசின் உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
பா.ம.க. நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளரும், வழக்கறிஞருமான சக்கரவர்த்தி அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
சக்கரவர்த்தி கடந்த 11-ம் தேதி தனது வீட்டிற்கு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பதை உடற்கூராய்வு அறிக்கை தெள்ளத் தெளிவாக்கியிருக்கிறது.
அரசியல் கட்சியின் முக்கிய தலைவராகவும் பிரபல வழக்கறிஞராகவும் செயல்பட்டு வந்த சக்கரவர்த்தி பல நாட்களாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, சதித்திட்டம் தீட்டி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பது தமிழக அரசின் உளவுத்துறை முற்றிலுமாக செயலிழந்துவிட்டதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
ராணிப்பேட்டை அருகே கள்ளத் துப்பாக்கி வைத்திருந்ததாக தி.மு.க.வின் கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டதில் தொடங்கி சக்கரவர்த்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டது வரையிலான செய்திகளை பார்க்கும்போது தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கள்ளத் துப்பாக்கி கலாசாரம் மேலோங்கியிருப்பதையே நம்மால் உணர முடிகிறது.
எனவே, பா.ம.க. நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு கடுமையான தண்டனையை பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு கள்ளத் துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? என்பதையும் விரிவாக விசாரித்து வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.