நிகிதா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - சீமான் கேள்வி

இளைஞர் அஜித்குமார் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியதே எங்களை ஏமாற்றத்தான் என்று சீமான் கூறினார்.;

Update:2025-07-09 19:39 IST

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார். தனது காரில் இருந்த நகைகள் மாயம் என மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரிக்க அழைத்து சென்று தாக்கியதில் அஜித்குமார் இறந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தாயாருடன் மடப்புரம் சென்று காவலாளி அஜித்குமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது:-

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பல்வேறு மோசடி புகார்கள் வந்துள்ள நிலையில் ஏன் அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. போராட்டம் நடத்தவே நெறிமுறைகள் விதிக்கப்படும் நிலையில், அஜித்குமாரை விசாரிக்கும் போது ஏன் அதனை பின்பற்றவில்லை?.

குற்றவாளியாக இருந்தாலும் காவல் நிலையத்திற்கு தான் அழைத்துச் சென்றிருக்க வேண்டும். எவ்வளவு வலியை அனுபவித்திருப்பார் அஜித்குமார், திருடப்பட்ட நகையை மீட்டு விட்டீர்களா? அந்த வழக்கின் நிலை என்ன?. குற்றம் தெரியாதபோதுதான் சிபிஐ விசாரணை தேவை; இங்கே வெளிப்படையாகத் தெரிகிறது உங்கள் காவல் துறை மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?; சிபிசிஐடியிலிருந்து விசாரணையை சிபிஐக்கு மாற்றியதே எங்களை ஏமாற்றத்தான். காவல்துறை விசாரணையில் அரசுக்கு நம்பிக்கை இல்லையா?. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்