அரசு பள்ளிக்குள் புகுந்து சத்துணவு கூடத்தை சூறையாடிய காட்டு யானை

குடியிருப்பு பகுதிக்கு அருகில் காட்டு யானை சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள், தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.;

Update:2025-06-18 02:11 IST

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள வனப்பகுதிகளிலும், எஸ்டேட் பகுதிகளிலும் காட்டுயானைகள் கூட்டமாகவும், ஒற்றையாகவும் சுற்றித்திரிந்து வருகிறது. அவைகள் சில நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

அதன்படி நேற்றுமுன்தினம் நள்ளிரவில் சிறுகுன்றா எஸ்டேட் கீழ் பிரிவு பகுதியையொட்டிய வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் காட்டுயானை நுழைந்து சத்துணவு கூடத்தின் கதவை உடைத்தது.

தொடர்ந்து தும்பிக்கையால் சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்கு உணவு சமைக்க வைத்திருந்த உணவு பொருட்களான அரிசி,பருப்பு, முட்டைகளை எடுத்து ருசித்து சாப்பிட்டுள்ளது. மேலும் சத்துணவு கூடத்தில் இருந்த மேஜை, நாற்காலி, பாத்திரங்களை உடைத்து சூறையாடியது. அத்துடன் சத்துணவு கூடம் தொடர்பான நோட்டு, புத்தகங்கள் அனைத்தையும் தும்பிக்கையால் வெளியே எடுத்து கிழித்து வீசியெறிந்துவிட்டு அங்கிருந்து சென்றது. இதனால் சத்துணவு கூடம் உள்ளேயும், வெளியேயும் உணவு பொருட்கள் உள்ளிட்டவை கீழே விழுந்து சிதறி கிடந்தது. ஆனாலும் இரவு நேரம் பள்ளிக்கூடம் மூடப்பட்டு யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் நேற்றும் பட்டப்பகலில் அந்த காட்டுயானை சிறுகுன்றா எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் தொடர்ந்து சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள், தொழிலாளர்கள் காட்டுயானை அச்சத்தில் உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த வால்பாறை வனச்சரக வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதியில் முகாமிட்டு காட்டுயானை நடமாட்டத்தை கண்காணித்து, அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காட்டுயானையிடம் இருந்து மிகவும் கவனமாக இருக்கும்படி எச்சரித்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்